சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளுவாம்பட்டி ரோடு திருவள்ளுவர் வீதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் மேஸ்திரி ஆன கருப்பசாமி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாலோ பிளாக் கல் மூலம் சுவர் அமைக்கும் பணியில் சின்னதம்பி, ஜோதி, பவித்ரா, முல்லை ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதன் அருகில் தொட்டி கட்ட 4 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிக்கு அருகில் நின்று சின்னத்தம்பியின் பேத்திகளான சன்சிகா, தேவசேனா ஆகிய 2 பேரும் விளையாடி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட சுவர் ஈரம் காயாமல் இருந்ததாலும், அருகில் குழி தோண்டப்பட்டதாலும் திடீரென சுவரின் ஒரு பகுதி இடிந்து சிறுமிகள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த 5 வயதுடைய சன்சிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தேவசேனாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.