முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கனகராஜ் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி தலைவரான நந்தகோபால் என்பவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு கனகராஜ் விலைபேசி முடித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சொத்தின் மீது ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்று வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறுவதற்காக நந்தகோபால் சொத்தின் அசல் பத்திரங்களை பெற்றதாக தெரிகிறது. அதன்பிறகு முன்பணமாக நந்தகோபால் 5 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அசல் பத்திரங்களை கொடுக்காமல் கிரயம் செய்ய வருமாறு நந்தகோபால் கனகராஜை வற்புறுத்தியுள்ளார். எனவே நில பத்திரங்களை திருப்பி தருமாறு கனகராஜ் கேட்டுள்ளார். ஆனால் நந்தகோபால் அசல் பத்திரங்களை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி நந்தகோபாலன் வீட்டிற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கனகராஜ் திடீரென அந்த மருந்து பாட்டிலில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக கூறப்படுகிறது. அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.