வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் நகை கடன் தள்ளுபடிகாக 639 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 19-ஆம் தேதி முதல் நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் வங்கியில் பணிபுரியும் தங்கமீனா மற்றும் எட்வின் பால்ராஜ் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கி மேலாளர் தங்கமீனா மற்றும் எட்வின் பால்ராஜை பணியிடை நீக்கம் செய்தார். அதன்பிறகு பணிகளை வேறு நபரிடம் ஒப்படைக்குமாறு கூறினார். அந்த நபர்கள் பணியை ஏற்க மறுத்தனர்.
இதனால் வங்கிக்கு வந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். எனவே நகை தள்ளுபடி பயனாளிகள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் மற்றும் துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் வங்கி மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு வங்கியில் நடைபெறும் போராட்டம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு தங்க மீனா மற்றும் எட்வின் பால்ராஜ் மீதான பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நகை தள்ளுபடி செய்யப்பட்டு வழங்கப்பட்டது.