கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற அதிகாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலத்தில் இருக்கும் தோட்டக்கலை துறையில் நரசிம்மமூர்த்தி என்பவர் உதவி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சாந்தி பிரசவத்திற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நரசிம்மமூர்த்தி தனது மனைவியை பார்ப்பதற்காக ஓசூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் சானமாவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் நரசிம்மமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நரசிம்மமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நரசிம்மமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.