மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் அரங்கநாதன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கெங்காபுரம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் சமத்துவபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முனுசாமி மற்றும் அரங்கநாதன் ஆகியோரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அரங்கநாதனுக்கு வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து விபத்தை ஏற்படுத்திய வரதராஜ், வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரையும் பறிமுதல் செய்தனர்.