தமிழ்நாட்டில் தனி வீடுகள் குறைந்து அடுக்குமாடி குடியிருப்புகள் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்கள் தங்களுக்குள் சங்கம் ஏற்படுத்தி அந்தந்த வளாகங்களை நிர்வாகம் செய்து வருகின்றனர். இதில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குபவர்களுக்கான தனிப்பட்ட மற்றும் பொதுவான உரிமைகள் எவை என்பதனை வரையறுப்பதற்காக 1994ல் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. மேலும் இதற்கான விதிமுறைகளும் தனியாக வகுக்கப்பட்டது. இப்போது ரியல் எஸ்டேட் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வீடு, மனை விற்பனையில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கான வரைவு ஆவணத்தை தமிழக அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் சட்டம் -2022 என்ற பெயரில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மொத்தமாக 29 பிரிவுகளை உடையதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற 1994-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 10 பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எனவே அடுக்குமாடி குடியிருப்பில்வீடு வாங்குபவர்கள் சங்கம் அமைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்றுக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பு ஏற்படுத்துவதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சங்க நிர்வாகிகள் உரிய அதிகார அமைப்பின் உத்தரவுகளை மீறினால் ஆவணங்களை வழங்க மறுத்தால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அடிப்படையில் இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பான தங்களது கருத்துகளை பொதுமக்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் [email protected] என்ற இ -மெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.