வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் மீண்டும் ஈடுபட்டுள்ளது.
வட கொரியா நாட்டில் இருந்து செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையானது முற்றிலுமாக அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரியா நாடு இதற்கு முன் சோதித்து பார்த்திடாத வகையில் தனது இலக்கை சரியாக தாக்கி அழிக்கும் Hwasongpho-17 வகை ஏவுகணையை தலைநகர் பியாங்யாங் என்ற விமான நிலையத்திலிருந்து செலுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து தென் கொரியா நாடு கூறியதாவது “கடந்த 2017-ம் ஆண்டு வட கொரியா சோதித்த சக்திவாய்ந்த ஏவுகணை 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழித்து ஜப்பான் கடற்பரப்பில் விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்புடன் ராஜாங்க சந்திப்பின் போது நீண்ட தூர ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா மீண்டும் தற்போது சோதனையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது” என கூறியுள்ளது.