கடந்த ஒரு மாதமாக ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதேபோல் உக்ரைன் தரப்பிலும் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 200 பேரை உக்ரைன் படைகள் கொன்றதோடு, 9 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஆயுதப்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பீரங்கி அமைப்புகள், 3 ஆளில்லா விமானங்கள், 3 விமானங்கள், 20 கவச வாகனங்கள், 12 டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 135 குழந்தைகளை கொன்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 184 குழந்தைகள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் 46 கொலைகள், கிழக்கு கார்கிவில் 44 கொலைகள், கீவ் நகரில் 64 கொலைகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்யா வேண்டுமென்றே பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.