கனடா, மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை கொடுத்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கனடா இந்த தடைகளை சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ் விதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அவசர கால சூழ்நிலையில் மியான்மர் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது மட்டுமில்லாமல் பொதுத் தேர்தலில் முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு மியான்மர் ராணுவம் முக்கிய அரசு அதிகாரிகளை கைது செய்தது. அதோடு மட்டுமில்லாமல் புதிய ஆட்சியும் ராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுடன் ஒருங்கிணைந்து கனடா அரசாங்கம் கூடுதல் தடைகளை விதிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பில் கனடா அரசு கூறியுள்ளதாவது, “கனடா, மியான்மர் மக்களுடன் ஒற்றுமையாக உள்ளது. மனித வாழ்வின் கொடூரமான அலட்சியத்தை இந்த ஆட்சி தொடரும்போது நாம் அமைதி காக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் மியான்மர் ராணுவத்தினர் தனது சொந்த மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்த அதிக அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று கனடா அரசு அழைப்பு விடுத்துள்ளது.