தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மகாராஷ்டிராவில் பெண்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மூவர்ணக் கொடி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பதாகைகளை வைத்திருந்தனர். கூட்டத்தில் பெண்கள் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கினார்கள். மேலும் ஃபைஸ் அஹமதுவின் புகழ்பெற்ற கவிதையான ’ஹம் தேஹங்கே’ கவிதையும் அவர்கள் வாசித்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுப்ரியா சுலே கூறும்போது, “தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை மூலம் பாஜக தனது பொருளாதாரத்தை இயக்க நினைக்கிறது. இந்தச் சட்ட விவகாரத்தில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாறுபட்ட அறிக்கைகளை வழங்குகிறார்கள். இது அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
நாடு முழுக்க தேசிய குடிமக்கள் பதிவேட்டைச் செயல்படுத்துவேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று கூறுகிறார். நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை மூடி மறைக்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டினர் இந்தியாவில் முதலீடு செய்யலாமா? என்று அச்சத்தில் உள்ளனர்” என்றார்.