சீனாவில் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் நச்சுக்கிருமி வேகமாக பரவி வருவதால் அங்கு செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் கொரேனோ எனப்படும் ஒரு வகை நச்சு வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்குள்ள மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் இதுவரை 45 பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய சீனாவின் புவி மாகாணத்திலுள்ள நகரில் கடந்த சில தினங்களாக கொரேனோ வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் பரவிய சாஸ் வைரஸ் போன்று இந்த வைரஸ் அம்மக்களுக்கு சுவாசக் கோளாறு , காய்ச்சல் என பல்வேறு அறிகுறிகளுடன் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் சீனாவுக்கு பயணம் செய்வோர் அங்கு உடல்நலமின்றி இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஜலதோஷம் , சளி , ஒழுகும் மூக்குடன் இருப்பவர்கள் அதிக அருகில் போக வேண்டாம் என்றும் , சுவாசப் பிரச்சனை இருந்தால் முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ளவும் , அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வும் பரிந்துரைத்துள்ளது. அது மட்டுமல்ல சீனா செல்லும் இந்தியர்கள் அங்குள்ள பண்ணைகள் , உயிருள்ள விலங்குகள் இருக்கும் சந்தைக்கு செல்ல வேண்டாம் என்றும் , அங்கு வெட்டப்படும் மிருகங்களை சமைக்காமலோ , சமைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனா சென்று வரும் சுற்றுலா பயணிகளில் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் டெல்லி , மும்பை , கொல்கத்தா , சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.