கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகை தள்ளுபடி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த்.
சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக அடமானம் வைத்தவர்களுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி 5 சவரன் நகை கடனை கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யுமாறு மக்கள் கேட்டு கோரிக்கை விடுத்தனர். மேலும் தற்போது நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பட்டியலில் தங்களின் பெயர் இல்லாததை கண்டு பலர் ஏமாற்றம் அடைந்த நிலையில் அரசின் மீது அதிருப்தி அடைந்து இருக்கின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிக்கையில் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் கூறியுள்ளதாவது, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் வைத்திருப்பவர்களில் கணக்கெடுப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது. அனைத்து கூட்டுறவு சங்கங்களில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 127 கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொது கடன்களில் சுமார் 34,422 நபர்களுக்கு ரூ.139.63 கோடி மதிப்பில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்து பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் அதற்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.