ஆம் ஆத்மி அரசின் 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ளது.
டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி அரசு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் என்ற முழக்கத்தினை முன்வைத்து வருகிறது. மேலும் இந்த முழக்கத்தின் மூலமே அண்டை மாநிலமான பஞ்சாபிலும் இந்த கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ளது.
இதுவே ஆம் ஆத்மி அரசின் 8-வது பட்ஜெட் ஆகும். இவ்வாறு தொடர்ந்து 8-வது ஆண்டாக டெல்லியில் ஆம் ஆத்மி அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. அதில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்பு மற்றும் 4.29 முதியவர்களுக்கு மாதம்தோறும் பென்ஷன் என்ற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து டெல்லி சட்டப் பேரவையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதில் ரூபாய் 75,800 கோடி மதிப்பில் பட்ஜெட்டானது பல திட்டங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் அவர் பேசியதாவது, 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டின் அளவு ரூ. 69,000 கோடி எனவும் கடந்த பட்ஜெட்டை காட்டிலும் இந்த பட்ஜெட்டில் 9.86 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் வரும் நிதியாண்டுக்காக ரூ.75,800 கோடி மதிப்பில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேலும் பேசிய அவர், கடந்த 7 ஆண்டுகளில் டெல்லியில் 1.78 லட்சத்துக்கும் மேலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இதற்காக ரூபாய் 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாதந்தோறும் முதியவர்களுக்கு பென்ஷன் தொகையானது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.