தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகள், பேரிடர் காலங்களில் நிதி உதவி ஆகியவை ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகையை பதிவு செய்து பொருள்களை வழங்குவதால் தினமும் 150 முதல் 200 பேர் வரை வரிசையில் நின்று பொருட்களை வாழ்கின்றனர்.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிநீர் வினியோகிக்க கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெயில் காலத்தில் ரேஷன் கடையில் மக்கள் வரிசையில் காத்திருந்து சிரமப்படுவதை கருத்தில் கொண்டு அவர்களின் தாகத்தைத் தீர்க்க குடிநீர் வினியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்ட தமிழக அரசு முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.