கோவை மாநகராட்சியின் 2022-23ஆம் வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் மக்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழகத்தில் சென்றமாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகளில் ஒவ்வொரு மாநகராட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் கோவை மாநகராட்சியில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கப்பட உள்ள நிலையில் பொது கூட்டமானது அன்று காலை 11:00 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாநகராட்சியின் பட்ஜெட் அனைத்தையும் நிறைவேற்றுமா? என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது.
தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறு தொழில் முனைவோர் சங்க நிர்வாகி ஜேம்ஸ் கூறியுள்ளதாவது, கோவையில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா மற்றும் மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. பல நிறுவனங்கள் மூடும் அளவிற்கு சென்றிருக்கின்றது. ஆகையால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் வரி செலுத்துவதற்கான கால அவகாசம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். புதிய சாலைகள் அமைப்பது தள்ளி வைத்துவிட்டு, இருக்கும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்றவற்றை பொறுத்தவரை போதிய வசதிகள் இருக்கின்றது. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.