ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட ரவுடிகள் தடுப்பு குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று காலை ரகசிய தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போது ரயில் நிலையத்திலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தார்கள். அதில் ஏழு பெரிய பண்டல்கள் மற்றும் 40 கிலோ எடையுள்ள 11 சிறிய பண்டல் கஞ்சா இருந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.
அதன்பின் அவர்களிடம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அதில் அவர்கள் தேனி மாவட்டம் போடி தாலுகா கோடை டாங்கிபட்டியை சேர்ந்த கணேசன் மகன் 42 வயதான ரமேஷ் மற்றும் மூணாம் பட்டி தாலுக்கா உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த மாரி என்பவருடைய மனைவி 62 வயதான சரஸ்வதி என்பது தெரியவந்தது.
இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி பின் விசாகப்பட்டினத்தில் இருந்து புவனேஸ்வர் – ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி விழுப்புரம் வந்து இறங்கி, பின் இங்கிருந்து பேருந்து மூலம் தேனி மாவட்டத்திற்கு சென்று அங்கு விற்பனை செய்வதாக தெரிய வந்தது. மேலும் இந்த கஞ்சாவை ஆந்திரா மாநிலத்தில் ஒரு கிலோ 10 ஆயிரம் ரூபாய் என்று வாங்கி, அதை தமிழகத்தில் ஒரு கிலோ 50 ஆயிரம் என்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரமேஷும், சரஸ்வதியும் இந்த கஞ்சா கடத்தலில் முகவராக இருந்துள்ளார்கள். இவர்களுக்கு மூளையாக கஞ்சா மொத்த வியாபாரி இருக்கின்றார். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.