வீட்டில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் பாளையத்தில் ஏசுராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை அனைவரும் வெளியே சென்ற பிறகு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏசுராஜா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது வீடு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால் உள்ளே செல்ல இயலவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், ரூபாய் நோட்டுகள், 2 பவுன் தங்க நகை, கட்டில், மெத்தை மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.