பந்தயத்தில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் காவலர் குடியிருப்பு பகுதியில் செபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான உதயா என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயா மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தினமும் உதயா நாகர்கோவிலிலிருந்து பாளையங்கோட்டை சிவந்திபட்டி மலை வரை நான்கு வழி சாலையில் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று அதிகாலை உதயா தனது மோட்டார் சைக்கிளில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் வாகைகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நடுரோட்டில் 2 துண்டாக உடைந்து வெப்பம் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த உதயா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.