தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகருங்குளத்தில் கட்டிட தொழிலாளியான சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கொத்தனார் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது சண்முகவேலின் கை மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் சண்முகவேலின் உறவினர்கள் கருங்குளம் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சண்முகவேலின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், பாதுகாப்பு இல்லாமல் பணியில் ஈடுபடுத்திய கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகு பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.