ஓட்டுநரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அச்சன்குளத்தில் ஓட்டுநரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சுரேஷ் தூங்கியுள்ளார். அப்போது திடீரென அங்கு சென்ற வாலிபர் சுரேஷை எழுப்பி அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியதோடு ஆட்டோவின் முன்புற கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் திருடன் திருடன் என சத்தம் போட்ட படி கீழே இறங்கி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்ட சரவணக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.