போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் வசிக்கும் சிறுமி தனது நண்பரான ஹரிகிருஷ்ணன் என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ்குமார், அஜித், பத்மாஸ்வரன் ஆகிய 3 வாலிபர்கள் தகராறு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சிறுமி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குண்டுகுளம் கிராமத்தில் பதுங்கியிருந்த பத்மாஸ்வரன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் வாலிபர்கள் இரண்டு போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். அப்போது இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தினேஷ் குமார் மற்றும் பத்மாஸ்வரன் ஆகிய இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, நவநீதகிருஷ்ணன், கருப்பசாமி என்ற இரண்டு போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோட முயன்ற போது விபத்தில் சிக்கிய தினேஷ் குமார் மற்றும் பத்மாஸ்வரன் ஆகிய இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அஜித்தை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.