மாநில அரசுகளுக்கு மின் பராமரிப்பு ஆலோசனை தொடர்பான அறிக்கை ஒன்றை மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள கொள்கைகள் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாளை(மார்ச் 28) மற்றும் நாளை மறுநாள்(மார்ச் 29) ஆகிய இரு நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் மத்திய மின்சார அமைச்சகம் சார்பில், மாநில அரசுகளுக்கு மின் பராமரிப்பு தொடர்பான ஆலோசனை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தினால் 24 மணி நேரமும், மின் சேவையை எவ்விதத்திலும் பாதிக்காதபடி, அவசர காலங்களில் செயல்படுவது போல், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே மின் தட்டுப்பாடு குறித்த புகார்கள் ஏதேனும் வந்தால், அதை நிவர்த்தி செய்யும் வகையிலான 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளை இயக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சார தட்டுப்பாடு இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.