இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் பல்சமய அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வர தொடங்கி உள்ளனர். இப்படி வந்த 17 இலங்கை வாழ் தமிழர்களை ஒரு மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இதனையடுத்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் மக்களுக்கு மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்துதான் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியும்.
உக்ரைனில் இருந்து 1,980 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இன்னும் 33 மாணவர்கள் உக்ரைனில் தங்கியுள்ளனர். இவர்கள் உக்ரைனில் பாதுகாப்பாக இருந்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உக்ரைனில் இருந்து சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதன்பிறகு இடைநிலை மாணவர்கள் உக்ரைனில் படிப்பை தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து கூடிய விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறினார். மேலும் சொந்த வீடு இல்லாத சிறுபான்மையினர் மக்களுக்கு கூடிய விரைவில் வீடு கட்டித்தரப்படும் என நிருபர்களிடம் கூறினார்.