கடந்த செப்டம்பரில் நடந்த குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் உள்ள 9 தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்கள், அதிகளவில் அரசு பணிக்கு தேர்ச்சி பெற்றனர். அதில் வெளி மாவட்டங்களான சிவகங்கை, விழுப்புரம், வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையிலான தேர்வாளர்கள், குறிப்பிட்ட ராமநாதபுரம் மையங்களில் தேர்வெழுதி தேர்வு பெற்றிருந்தனர்.
இது குறித்து, டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேரில் சென்று இரண்டு நாள்கள் விசாரணை நடத்தினர். மேலும், கடந்த வாரம் சந்தேகத்திற்குரிய 95க்கும் மேற்படட் தேர்வர்களை சென்னைக்கு அழைத்து, 19 மணி நேரம் தொடர் விசாரணையும் நடத்தினர். மேலும், அவர்களின் அறிவுத்திறனை சோதித்துப்பார்க்க மறுதேர்வையும் நடத்தினர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரும்பாலான தேர்வர்கள் ஒரே மாதிரியான காரணத்தைக் கூறியுள்ளனர். அவர்கள் இறந்தவர்களுக்கான சடங்கினை செய்தவற்காகவே ராமேஸ்வரம் சென்றதாகக் கூறியுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவரின் விபரத்தையும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
அதனடிப்படையில் தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டவர்களின் முடிவினை ரத்துசெய்து அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குருப் 1 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டது போல, குருப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடாத தேர்வர்களுக்கு ஏற்கனவே உள்ள பட்டியல் அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.