அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” என்ற வைரஸால் தற்போது நான்காவது அலை பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் மீண்டும் தீவிரப்படுத்தப்படலாம்.
கொரோனா 4-வது அலை பரவல் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. அதில் முதலாவதாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி முகாம்களை சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும். இரண்டாவதாக, முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.
மூன்றாவதாக, மாநிலத்தில் கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்பட வேண்டுமானால் முதலமைச்சருக்கு நிபுணர்குழு பரிந்துரை செய்யும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை பரவும் என்று நிபுணர் குழு எச்சரித்துள்ளது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை போலவே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.