கடையின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகிலேயே வாடகை கட்டிடத்தில் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கனகராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு கனகராஜ் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் உள்ள பீரோவில் வைத்திருந்த ஆரம், செயின்கள் மற்றும் மோதிரம் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கனகராஜ் உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.