சேலத்தில் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியவர்களில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி அருகே ஒவ்வொரு ஆண்டும் காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது போல் வங்காநரிகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஆனால் வங்காநரி பாதுகாக்க பட வேண்டிய உயிரினம் என்பதால், இந்த போட்டிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும் ஊர் மக்கள் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தி வருவதும் அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பதும் வழக்கமாக தொடர்ந்து கொண்டிருந்தது.
அதே போல் இவ்வாண்டும் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 70 ஆயிரம் வரை அபராதமும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், வாழப்பாடி ஊர்மக்கள் வனப்பகுதிக்குள் இருந்து வங்காநரியை பிடித்து வந்து அதற்கு மாலைகள் அணிவித்து பின் பூஜைகளுக்கு பின் கோவில் மைதானத்தில் வங்காநரிகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர்.
இதையடுத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போட்டியை உடனடியாக நிறுத்தியதோடு, வங்காநரியை பிடித்து வந்த கண்ணியம் பாளையத்தைச் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும், ஒரு நபருக்கு ரூ 5000 வீதம், ரூ 55,000 அபராதம் விதித்தனர் .தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.