இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி சிகிச்சை பெறுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மலர்கொடியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.