தாய் தனது 2 மகன்களுடன் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள இலையூர் காமராஜ் நகரில் பெயிண்டரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா வாரியங்காவல் கிராமத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து மனைவியின் நடத்தையை மணிகண்டன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் மஞ்சுளா தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்போது மஞ்சுளாவின் தாய் அவரை கண்டித்து மீண்டும் இலையூருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் மஞ்சுளா தனது கணவர் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.