தமிழகத்தில் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு பல லட்சம் பேர் வேலை இழந்தனர். அத்துடன் அரசு போட்டித் தேர்வுகளும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரசுக்கு நிதி நெருக்கடி இருந்ததால் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு வெளிநாட்டினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி,
- நோபல் ஸ்டீல் நிறுவனம் ரூபாய் 1,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்ள இருக்கிறது. இதன்மூலமாக 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- ஒயிட் ஹவுஸ் நிறுவனம் ரூபாய் 500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தையல் ஆலைகளை நிறுவ உள்ளது. இதன்மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- ஆஸ்டர் டி.எம் ஹெல்த்கேர் அமைப்பு ரூபாய் 500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மருத்துவமனை அமைக்க உள்ளது. இதன்மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
- ஷெராப் குழும நிறுவனம் ரூபாய் 500 கோடி முதலீட்டில் இருப்புப்பாதை வசதியுடன் கூடிய சரக்கு பூங்காவை ஏற்படுத்தவுள்ளது. இதன்மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறாக ரூபாய் 2600 கோடிக்கான முதலீடு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.