துபாயில் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில், தமிழகத்தின் பெருமையை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
துபாயில் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பானது நடைபெற்றுள்ளது. இதில் துபாயை சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம், நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம், டிரான்ஸ்வேல்டு குழுமம், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்கள்பங்கேற்றுள்ளன. இதையடுத்து அந்த நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் மொத்தம் 9,700 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும் 2,600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன்பின் இந்த சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஐக்கிய அரபு நாடுகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மொழி பேசும் மக்கள் இங்கு பணியாற்றியும் மற்றும் வணிகம் செய்தும் வருகின்றனர்.மேலும் ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழர்களின் கடின உழைப்பு , மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது.
இதையடுத்து 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்துக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதாகவும், மற்றும் சுற்றுலாத் துறையிலும், விருந்தோம்பல் துறையிலும் இங்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்று முதல்வர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வேளாண்மைத் துறையை பொருத்தவரையில் குளிர்பதன கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றின் தேவையானது தமிழ்நாட்டுக்கு பெரிதும் இருக்கிறது. மேலும் மின்னணுவியல் துறையில் மின் வாகனங்கள் மற்றும் மின் நிலையங்கள் போன்றவற்றிற்கான முதலீடுகளை நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம் என தெரிவித்தார். அதன்பின் இந்தியாவிலேயே முதன்முதலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்றும் இந்த அடிக்கல் நாட்டு விழா அன்றே 375 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்க பட்டதை சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில், கடந்த 10 மாதங்களில் மட்டும் 800 கோடி டாலர் மதிப்பில், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான 120 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதையும் முதல்வர் ஸ்டாலின் விளக்கி கூறினார். இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஐபிபிசி துபாய் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.