மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுவதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டு வருவதால், சென்னையில் மெட்ரோ ரயில், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.