கேரள மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரில் இரிஞ்ஞாலகுடா பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதின், தீபா தம்பதியினர். இவர்களுக்கு மீரவ் கிருஷ்ணன் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிதின் விடுமுறையில் தன் குழந்தையை பார்ப்பதற்காக ஏராளமான விளையாட்டு பொருட்களை வாங்கி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் நிதின் விடுமுறை முடிந்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிய அளவிலான ரப்பர் பந்தை வாயில் போட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் குழந்தையின் தொண்டையில் பந்து சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா தனது குழந்தையை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த பந்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த போதே மூச்சு விடுவதற்கு சிரமபட்ட அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரிஞ்ஞாலகுடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.