நாடு தழுவிய அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் வங்கி மற்றும் போக்குவரத்து சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்தில் எச். எம்.எஸ், ஏ.ஐ.சி.டி.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி.எம் சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து பணிக்கு வராதவர்களுக்கு 2 நாட்கள் சம்பளம் ரத்து செய்யப்படும். இருப்பினும் அரசு ஊழியர்கள் இதை பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சி.ஐ.டி.யு பொதுச்செயலாளர் இன்றும், நாளையும் ஆட்டோ, பேருந்துகள் மற்றும் கால் டாக்சிகள் போன்றவைகள் இயங்காது என்று அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் மாநில துணை தலைவர் இராஜேந்திரன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது மாநில மைய சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலக உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.