கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்ததில் ஏதோ குளறுபடி ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கு வழங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டு, விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின் பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டும், நகைகள் மற்றும் தள்ளுபடி சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த வேடசின்னனூர் என்ற ஊரில் 450 க்கு மேற்பட்டவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளார்கள். இதையடுத்து முதல்வரின் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பின் அடிப்படையில், அவர்கள் கூட்டுறவு வங்கியை அணுகியுள்ளனர்.
அப்போது 91 நபர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி தகுதியில்லை என கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து, நகை கடன் தள்ளுபடி செய்ததில் ஏதோ குளறுபடி ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீஸ் அதிகாரி, வங்கி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தகுதியுடையவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடியை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியபின், பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.