கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆத்துப்பாலம் ஆசாத் நகரில் சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த 2 பித்தளை தட்டு, 2 குத்து விளக்கு, 2 தொங்கு விளக்கு, 2 ஜோடி சலங்கை, 2 மணி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.