சுற்றுலா பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இளம்பெண் பலியானதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டி.வி.எஸ் நகரில் வசித்து வருபவர் ராஜு. சம்பவத்தன்று ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் காரில் கிருஷ்ணகிரிக்கு பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. அவர் சென்ற காரில் 8 பேர் பயணித்துள்ளார்கள். இவர்களது கார் சூளகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த சுற்றுலா பேருந்து எதிர்பாராத விதமாக ராஜீவின் கார் மீது மோதியுள்ளது.
இதனால் கார் ஓசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தடுப்பு சுவற்றில் கட்டுப்பாட்டை மீறி மோதி விபத்து ஏற்பட்டு கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்து ராஜுவின் மனைவி சாரதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . மேலும் காரில் வந்த மற்ற 7 பேரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சூளகிரி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் சிக்கி தவித்தவர்களை மீட்டு ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த சாரதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.