Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்டி தூக்கிய காளைகள்….. சிறுமி உட்பட 30 பேர் படுகாயம்….. திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம்  பொத்தமேட்டுப்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு, போட்டியில்  காளை முட்டி தூக்கியதில் சிறுமி உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை  அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே புனித வியாகுல மாதா ஆலய மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண மணப்பாறை வட்டாட்சியர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதை  தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 650 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். போட்டியில் வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றிபெறும் காளைகளின்  உரிமையாளர்களுக்கும், வாடிவாசலில் சீறிபாய்ந்து வரும் காளையை அடக்கும் காளையர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, உள்ளிட்ட எண்ணற்ற  பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறந்த மாடு மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்புப் பரிசாக 2 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

இது  ஒருபுறம் இருக்க  போட்டியில் காளை மாடுகள் சீறிப்பாய்ந்து முட்டியதில் மாடுபிடி வீரர்கள், போட்டியினை காண வந்தவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த  விபத்தில் காயமடைந்த 5வயது சிறுமி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், திருச்சி காவல் தலைமை அதிகாரி  தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |