தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 28-ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மார்ச் 29-ஆம் தேதி தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். இதைத்தொடர்ந்து மார்ச் 30-ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். இதனையடுத்து மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி காரைக்கால், புதுவை மற்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கடம்பூர், கயத்தாறு, அம்பாசமுத்திரம் பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மீனவர்களுக்கான எந்த ஒரு எச்சரிக்கையும் விடப்படவில்லை.