நண்பர்களுடன் நடு இரவில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கத்திலுள்ள நரியன் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருடைய மகன் கௌரி சங்கர். இவர் மண்ணச்சநல்லூரிலிருந்து சமயபுரம் செல்லும் வழியில் வெங்கங்குடி என்னும் கிராமத்தில் தேங்காய் நார் கம்பெனி வைத்து நடத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கௌரி சங்கர் நேற்று முன்தினம் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலருடன் சேர்ந்து தேங்காய்நார் கம்பெனியில் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அங்கு பிறந்தநாள் கொண்டாட வந்த சில நண்பர்களுடன் நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். பின்னர் அவரும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து மது அறுந்தியுள்ளனர். இந்நிலையில்அதிக குடிபோதையில் இருந்த நண்பர்களுக்கும், கௌரி சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறில் கௌரிசங்கரை அவருடைய நண்பர்கள் இரும்பு கடப்பராயைல் தலையில் வேகமாக தாக்கியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் மற்றும் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு கௌரி சங்கர் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஆகிய இரண்டு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடத்தில் நடந்துள்ளது. இதனால் சமயபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொலை செய்தவர்களின் கைரேகைகளை ஆய்வு செய்தனர். அதோடு போலீஸ் மோப்ப நாய் கொண்டு வந்து துப்பு துலக்கப்பட்டுள்ளது .கொலை செய்யப்பட்ட கௌரி சங்கரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கவுரிசங்கர் ஸ்ரீரங்கத்தில் ரவுடி எனறும் அவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது . தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலை தொடர்பாக சந்தேகப்படும் சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.