கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎஃப், இந்திய தொழிலக பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ் ஆகியவற்றின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிய அறிவிப்பு ஒன்றையும் அப்போது வெளியிட்டிருந்தார். அதாவது துணை ராணுவ படையினர் தங்கள் குடும்பத்துடன் ஆண்டுக்கு 100 நாட்கள் செலவிட அனுமதி வழங்குவது தான் அந்த திட்டம். துணை ராணுவ படையினர் அடர்ந்த காடுகளிலும், கடும் குளிரிலும், உயரமான மலைகளிலும் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
சிலர் தங்களுக்குள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களுடைய மன அழுத்தத்தை போக்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த திட்டம் குறித்து தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் கடைசியாக ஒரு கூட்டம் நடைபெற்றது. தற்போது இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிஆர்பிஎஃப் இயக்குனர் குல்தீப் கூறுகையில், “தற்போது துணை ராணுவ படையினருக்கு விடுமுறை சராசரியாக 75 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த விடுமுறை குறைவாகவோ, கூடுதலாகவோ அமையும். 100 நாட்கள் விடுமுறை அனுமதிக்கும் திட்டத்தில் அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்துவது ? என்று அடுத்த மாதம் இறுதியாக முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.