சென்னை மெரினா கடற்கரையின் மணல்பரப்பில் பலூன் வியாபாரம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவந்தவர்கள் ஜானி – ரந்துபோஸ்லே தம்பதியினர். இவர்களுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தக் குடும்பத்தைக் கவனித்த பெண் ஒருவர், ‘ உங்களின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது, நான் சினிமாவில் நடிக்க வைக்கிறேன்’ என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
இதனைக் குழந்தையின் பெற்றோர் நம்பிவிட்ட நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்துக்கு குழந்தையுடன் வருமாறு அப்பெண் கூறியுள்ளார். அதன்படி தாய் ரந்துபோஸ்லே, அவரது மாமியார் ஆகிய இருவரும் குழந்தையை அழைத்துக்கொண்டுச் சென்றுள்ளனர்.
அங்கு சூழல் சரியாக இல்லை என்பதை உணர்ந்த அப்பெண், இவர்களை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், குழந்தைக்கு ஆடைமாற்ற வேண்டும், ஸ்கின் டெஸ்ட் எடுக்க வேண்டும் போன்ற காரணங்களைக் கூறி குழந்தையை தனியாகத் தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது சென்றவர்தான், பின்னர் அப்பெண் திரும்பவே இல்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு நின்று நின்று பார்த்த தாயும் பாட்டியும், ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் நடந்தவற்றைக் கூறியுள்ளனர்.
பின்னர், காவல் அலுவலர்கள் குழந்தை கடத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், சிசிடிவி பதிவுகளின் உதவியுடன் அப்பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொது மக்கள் உதவியையும் காவல் துறையினர் நாடியுள்ளனர்.