ஆற்றுமணல் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆழ்வார்தோப்பு மற்றும் தோழப்பன்பண்ணை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் பேரூர் பகுதியில் வசிக்கும் முத்துராமன் மற்றும் பூல்பாண்டி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் சட்டவிரோதமாக ஆற்றில் அனுமதியின்றி மணல் திருடியது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 70 முட்டைகளில் இருந்த மணல்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் முத்துராமன் மீது ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் ஏற்கனவே கொலை முயற்சி உள்பட 2 வழக்குகளும், நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஜங்ஷன் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.