லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் இருக்கும் 252 கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் தங்க நகை பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழும், நகையும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காடையாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளி ஒருவர் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழை சரிபார்க்க சென்றுள்ளார்.
அப்போது கூட்டுறவு சங்க செயலாளர் விஜயகுமார் பயனாளியிடம் நகையை திரும்ப ஒப்படைப்பதற்கு 8000 ரூபாய் லஞ்சமாக வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து ஓமலூர் சரக துணை பதிவாளர் சுவேதா விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் விஜயகுமார் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனை அடுத்து விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.