பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் நேற்று 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள தொமுச பொருளாளர் நடராஜன், “நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் இன்று (மார்ச்.29) தொடர்ந்தாலும் தமிழகத்தில் 60 சதவீதம் அரசு பேருந்துகள் இயக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும். முன்னணி நிர்வாகிகள் மட்டுமே இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். மற்ற தொழிலாளர்கள் பணிக்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார்.