சென்னையிலுள்ள ராயபுரம் வண்ணாரப்பேட்டை மற்றும் வடபழனி தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் பாண்டியா என்ற பெயரில் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நேற்று முன்தினம் நண்பகல் வேளையில் ராயபுரம் காவல் நிலையம் அருகே உள்ள எஸ்.என்.செட்டி என்ற தெருவில் உள்ள பாண்டியாஸ் உணவகத்தில் தனியார் ஒருவர் அறக்கட்டளை தொடங்குவதால் 30 ஏழை குழந்தைகளுக்கு நண்பகல் உணவினை வழங்கியுள்ளார்.
அப்போது அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கெட்டுப்போன உணவு வகைகள் பரிமாறப்பட்ட தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு பரிமாறிய மீன் உணவானது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் இது குறித்து அவரிடம் தெரிவித்த போது, மாற்றித் தருகிறேன் அல்லது வேறுபொருள் தருகிறேன் என்று கூறியுள்ளனர். அந்த நபர்கள் தக்க பதில் கூறாததால், சம்பந்தப்பட்டவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஓட்டலுக்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை பார்வையிட்டுள்ளனர். அப்போது அந்த உணவகத்தின் சமையலறை மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி மற்றும் மீன்களை சோதனையிட்டதில், அந்த குளிர்சாதன பெட்டி சரியாக வேலை செய்யாத காரணத்தால் அசைவ உணவுகளை பாலித்தின் பையில் ஐஸ் கட்டியை போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளையும் அவர்கள் சரியாக பராமரிக்கவில்லை என்று அதிகாரிகள் உரிமையாளரிடம் கூறியுள்ளனர். அதன்பிறகு அதே பகுதியில் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சாலையில் செயல்படும் பாண்டியாஸ் உணவகத்துக்கும் அதிகாரிகள் சென்றனர். அங்கும் இதே நிலைமை காணப்பட்டது. அதைப்போல் வண்ணாரப்பேட்டையில் உள்ள டி.எச்.சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கும் இதே போல் குளிர்பதன கிடங்கு சரியாக வேலை செய்யாமல் மீன், இறைச்சி போன்றவை கெட்டுபோனதாக தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.