மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் அருக இலந்தையடிவிளை பகுதியில் ஜோசப்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஸ்டீபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜோசப்ராஜ் ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்காரணமாக கருணை அடிப்படையில் ஜோசப்ராஜின் மகன் ஸ்டீபனுக்கு மின்வாரியத்துறையில் வேலை கிடைத்தது. இந்நிலையில் எட்டு கூட்டுதேரிவிளை பகுதியில் உள்ள ஒரு பழுதடைந்த டிரான்ஸ்பார்மரில் ஸ்டீபன் சக ஊழியர்களுடன் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி ஸ்டீபன் தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் ஸ்டீபனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.