தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மற்றும் ஐக்கியஅரபு நாடுகளிடையே பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் அடிப்படையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் துபாய் பயணத்தினை முடித்துக்கொண்டு அபுதாபிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மார்ச் 28 (நேற்று) பல நிகழ்வுகளில் பங்கேற்றார். இதையடுத்து ஐக்கியஅரபு நாடுகளைச் சேர்ந்த அபுதாபி முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பேலசில் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்தித்தார். முபாதாலா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு நிர்வாக இயக்குநர் சையத் அராருடனான சந்திப்பின் போது, தமிழகத்தில் மிகப்பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு இந்த நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
முன்பே முபாதாலா நிறுவனம் பிரின்ஸ்டன் டிஜிட்டல் எனும் நிறுவனத்தின் பெயரில் 350 மில்லியன் டாலர் முதலீடுகள் மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்லாமல் முபாதாலா நிறுவனம் மற்றும் தமிழக உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் நிறுவனங்களுக்கு இடையே ஒரு பணிக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டிலுள்ள பசுமை எரிசக்தி, சாலை திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் மற்றும் உடனே தொடங்கும் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான விடுதிகள் மற்றும் தகவல் தரவு மையங்கள் ஆகிய மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுத்திடவும் முதல்வர் ஸ்டாலின் முபாதாலா நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அதன்பின் அபுதாபி வர்த்தகசபை தலைவரும், ஐக்கிய அரபு நாடுகளின் வர்த்தகசபை மற்றும் அரபு வர்த்தகக் கூட்டமைப்பு தலைவருமான எச்.இ.அப்துல்லா முகமது அல் மஸ்ரோயீ உடனான சந்திப்பின்போது அபுதாபி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்துதல், உணவுப் பூங்காக்கள், குளிர்பதனக் கிடங்குகள், சரக்கு மற்றும் சேவைகள், வணிகத்தீர்வை திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் தமிழக்தில் இருந்து உணவுப் பொருட்களை ஐக்கிய அரபு நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளலாம் எனவும் ஆலோசனை தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு மேற்கொள்ள ஆர்வம் உள்ள நிறுவனங்கள், குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்கள், தடையில்லா வர்த்தக மண்டலங்கள், கிடங்குகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களில் முதலீடு செய்திடலாம் எனவும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் தொழில், சேவை, சில்லரை வணிகங்கள் போன்ற துறைகளிலுள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான உள்கட்டமைப்புத் தேவைகள் அதிகம் இருக்கிறது எனவும் தெரிவித்தார். ஆகவே இந்த துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு அபுதாபி நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். ஏடிகியூ நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி, எச்.இ.முகம்மது அல் சுவைதி உடனான சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மருத்துவ சுகாதார திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் ஆகிய திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு இந்த நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இவ்வாறு மேற்கொண்ட சந்திப்புகளை முடித்துக்கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யூசுப் அலியை அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், லுலு நிறுவனத்து உடன் ஒரு புரிந்து உணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டது. லுலு நிறுவனம் ரூபாய் 3,500 கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற நோக்கில் 3 திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறது. அதில் ரூபாய் 2,500 கோடி முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் ரூ.1,000 கோடி முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.