வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் அருகே கரையான்குழி பகுதியில் பொன்னுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவருடைய மனைவி குவைத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் தனது மனைவியுடன் குவைத்தில் தங்கியுள்ளார். இதன்காரணமாக வீட்டை உறவினர் ஒருவர் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1 பவுன் தங்க மோதிரம் மற்றும் சில வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.