விருத்தாச்சலம் – கடலூர் நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் to கடலூர் நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகர் 18வது வார்டில் இருக்கின்ற அரசு சேமிப்பு குடோனுக்கு செல்லும் பாதையில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியே சென்றது. அந்த இடத்தில் குடிநீர் வெளியே வந்தும் பணியாளர்கள் சாலை பணியை மேற்கொண்டனர்.
இதைப்பற்றி அறிந்த அந்தப் பகுதி மக்கள் மற்றும் 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அன்பழகன் அந்த இடத்திற்கு வந்து சாலைப் பணியை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து விட்டு சாலைப் பணியை தொடருங்கள். இப்படி தண்ணீர் வருவதால் சாலையின் தரம் குறைந்து விரைவில் சாலை பழுதாகிவிடும் என்றார்கள்.
மேலும் இந்த இடத்தில் அரசு சேமிப்பு குடோன் இருப்பதால் கனரக வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. எனவே தரமான பணியை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்கள். இதை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் குடிநீர் குழாயை சரி செய்துவிட்டு சாலைப் பணியை மேற்கொள்வோம் என்று உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.